Author: - இரவீ -
•1:17 AM

ஒரு சின்னப் பையன் அப்பாவாகிறான்

இரவு எட்டு மணியாகிவிட்டால் எனக்கு நித்திரை வந்துவிடும். சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுவேன். இன்றைக்கு நான் இன்னும் படுக்கைக்குப் போகவில்லை. கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் மணி ஒன்பது அடித்தது. எனக்கு நித்திரை வரவில்லை. கொழும்பிலிருந்து யாழ்தேவி றெயிலில் அக்கா வருவா. அவவுடன் அத்தானும் வருவார். அக்காவைப் பார்க்கிறதுக்கு எனக்கு ஆசையாக இருக்கிறது. போன வருஷந்தான் அத்தான் அக்காவைக் கலியாணஞ் செய்து கொழும்புக்குக் கூட்டிக்கொண்டு போனவர். அத்தானுக்குக் கொழும்பிலை தான் வேலை. அக்காவுக்கு என்னிடம் நல்ல விருப்பம். கலியாணஞ் செய்யிறதுக்கு முன்னம், அக்கா எனக்கு ஒவ்வொரு நாளும் குளிக்கவாத்துவிடுவா. தலை சீவிவிடுவா. இரவில் பாடமுஞ் சொல்லித் தருவா.

அண்ணன்மார் இரண்டு பேரும் போர்டிங்கிலை இருந்து படிக்கினம். அவையளை எனக்குப் பிடிக்காது. அவையளுக்கு என்னுடைய தலையிலை நோகக் கூடியதாகக் குட்டத்தான் தெரியும் . வேறையொண்டுந் தெரியாது. அப்பாவுக்கும் கொழும்பிலைதான் வேலை. நான் வீட்டிலை கடைக்குட்டி. அதனால் எனக்குக் கொஞ்சம் செல்லம்.

அக்கா கொழும்புக்குப் போனபிறகு அவவின் எண்ணம் எனக்கு அடிக்கடி வரும். அக்காவை உடனே பார்க்கவேணும் போல இருக்கும். அக்கா கொழும்பிலிருந்து அடிக்கடி வீட்டுக்குக் கடுதாசி எழுதுவா. அதை நான் எழுத்துக் கூட்டி வாசிப்பேன். அதை வாசிக்கிற பொழுது எனக்குச் சந்தோஷமாக இருக்கும். அக்கா மிச்சம் நல்லவ நான் குழப்படி செய்தாலும் ஒருநாளும் அடிக்கிறது இல்லை. நான் கொஞ்சம் குழப்படிதான். ஆனால் அக்கா சொன்னால் கேட்டு நடப்பன். எந்தக் குழப்படியும் செய்யமாட்டேன்.

வீட்டுப் படலையடியில் கார் வந்து நிற்கிறது. அம்மா ... அம்மா... அக்கா வந்திட்டா என்று கூவிக்கொண்டு சந்தோஷத்துடன் துள்ளிக் குதித்துப் படலையடிக்கு ஓடுகிறேன். மற்ற நாட்களில் இருட்டிவிட்டால் நான் வீட்டுக்கு வெளியே வரவும் மாட்டேன். இருட்டைக் கண்டால் எனக்கு சரியான பயம்.

அம்மா அரிக்கன் லாந்தரை எடுத்துக்கொண்டு எனக்கு பின்னால் வருகிறா. அக்காவும் அத்தானும் காரில் இருந்து இறங்குகிறார்கள். எனக்கு அக்காவின் கையைப் பிடித்துக்கொண்டு துள்ள வேண்டும்போல் இருக்கிறது. அக்கா கையில் ஏதோ பார்சல் வைத்திருக்கிறா. அதனால் அக்காவின் கையை நான் பிடிக்கவில்லை. பார்சலில் என்ன இருக்குமென்டு எனக்குத் தெரியும். சொக்கிலேட், பிஸ்கட், இனிப்பு எல்லாந்தான் இருக்கும். அக்கா எனக்கு ஏதும் விளையாட்டுச் சாமான்களும் கொண்டு வந்திருப்பா.

இண்டைக்கு றெயிலிலை சரியான சனம். இருக்கிறதுக்கும் இடம் கிடைக்கேல்லைஅம்மாவிடந்தான் அக்கா சொல்லுகிறா. அத்தான் கார்க்காரனுக்குக் காசைக் கொடுத்துவிட்டுச் சூட்கேசையும் தூக்கிக் கொண்டு நடக்கிறார். நானும் அவர்களுக்குப் பின்னால் நடக்கிறேன்.

அக்கா என்னோடை ஏன் கதைக்கவில்லை? இருட்டில் நான் நிற்கிறதைக் கவனிக்கவில்லையோ? அக்காவுக்குத் தெரியும்படியாக முன்னுக்குப் போகிறேன். அக்கா இப்பவும் என்னோடை கதைக்கவில்லை. அக்கா பாவம் றெயிலில் வந்தபடியால் சரியான களைப்புப்போல இருக்கு. அக்காவைச் சுமக்கவிடக்கூடாது. கையில் இருக்கும் பார்சலை வாங்கிக்கொள்வதற்காக நான் கையை நீட்டுகிறேன். அக்கா ஒன்றும் பேசாமல் பார்சலைக் கொடுக்கிறா.

வீட்டுக்கு வந்ததும் அத்தான் தன் சூட்கேசை மேசையில் வைக்கிறார். நானும் பார்சலை அதற்குப் பக்கத்தில் வைக்கிறேன். அக்கா அதையெல்லாம் எடுத்துக்கொண்டு அறைக்குள் போகிறா. அத்தானும் அக்காவுக்குப் பின்னால் போகிறார். இரண்டு பேரும் உடுப்பை மாற்றிக்கொண்டு முகம் கழுவுவதற்குக் கிணற்றடிக்குப் போகிறார்கள்.

அக்காவும் அத்தானும் முகம் கழுவிக்கொண்டு வந்த பிறகு சாப்பிட உட்காருகிறார்கள். நானும் அவர்களோடு உட்காருகிறேன். அம்மா எல்லோருக்கும் சாப்பாடு போடுகிறா.

அக்கா ஏதோ கொழும்புப் புதினங்களையெல்லாம் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு சாப்பிடுகிறா. அத்தானும் எதோவெல்லாம் சொல்லுகிறார். அம்மா ஊர்ப் புதினங்களைச் சொல்லுகிறா.

முருங்கைக்காய்க் கறியென்றால் அத்தானுக்கு நல்ல விருப்பமாம். அத்தானுக்குக் கொஞ்சம் முருங்கைக்காய் கறி போடும்படி அக்கா சொல்லுகிறா. அம்மா அத்தானுக்கு நிறைய முருங்கைக்காய்க் கறி போடுகிறா.

அவர்கள் கதைப்பதையெல்லாம் கேட்டுக்கொண்டு நான் சாப்பிடுகிறேன். அக்காவின் முகத்தை அடிக்கடி ஆசையோடு நிமிர்ந்து பார்க்கிறேன் . அக்கா என்னைப் பார்க்கவில்லை. என்னுடன் ஒரு கதையும் பேசவில்லை அக்கா அத்தானைத்தான் கவனித்துக் கொள்ளுகிறா.

அத்தானும் அக்காவும் சாப்பிட்டு முடிந்ததும் கைகழுவப் போய்விட்டார்கள். நான் இன்னும் கோப்பையில் இருந்த அரைவாசிச் சோற்றைக்கூடச் சாப்பிடவில்லை. என்னால் சாப்பிட முடியவில்லை. அக்கா என்னுடன் ஏன் கதைக்கவில்லை? சாப்பாடு தொண்டைக்குக் கீழே இறங்குவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. கலியாணம் முடிச்சபிறகு அக்கா எவ்வளவோ மாறி விட்டா. அவவுக்கு அத்தான் தான் பெரிசாப் போச்சு. எனக்கு கண்கள் கலங்குகின்றன. அழுகை வந்துடும் போல் இருக்கிறது.

ஏனடா மணி, ிளகாயைக் கடிச்சுப்போட்டியே? தண்ணியைக் குடி,” என்று சொல்லி அம்மா மூக்குப்பேணியுடன் தண்ணீரை எனக்கு முன்னால் வைக்கிறா. நான் மடக் மடக்கென்று தண்ணியைக் குடிச்சிட்டுச் சோற்றைக் கையால் அளைந்தபடி இருக்கிறேன்.

அக்காவும் அத்தானும் பாயை எடுத்துக்கொண்டு அறைக்குள் போகிறார்கள்; அக்கா அறைக் கதவைச் சாத்திறா.

எனக்கு புரையேறுகிறது. முந்தியென்றால் அக்கா என்னுடன் தான் படுப்பா. இப்ப அத்தானைக் கலியாணஞ் செய்தபிறகு அறைக்குள் படுப்பதற்குப் போகிறா. இண்டைக்கென்றாலும் நான் அக்காவுடன் படுக்கலாமெண்டு ஆசையோடு இருந்தேன். அக்காவுக்கு இப்ப நான் ஒருத்தன் இருக்கிறன் என்ற நினைப்பே இல்லைப் போல இருக்கு.

எல்லாம் இந்த அத்தான் வந்த பிறகுதான் அக்கா இப்படி மாறிவிட்டா. அத்தானின் மேல் எனக்குக் கோபங் கோபமாக வருகிறது அவருக்குப் பெரிய நடப்பு. ஏன் இண்டைக்கெண்டாலும் அக்காவை என்னோடு படுக்கவிட்டால் என்ன?

எனக்கு கண்ணிலே நீர் முட்டிவிட்டது. கன்னத்திலே வழிந்து விடும்போல இருக்கிறது. அம்மாவுக்குத் தெரியாமல் கோப்பையுடன் சோற்றை வெளியே எடுத்துக்கொண்டு போகிறேன் . வெளியே இருட்டாகத்தான் இருக்கிறது எனக்கு பயம் வரவில்லை. ஏன் நான் பயப்படவேணும் ? அம்மாவுக்குத் தெரியாமல் சோற்றை எறிந்துவிட வேணும். அம்மா கண்டால் ஏச்சுத்தான் கிடைக்கும்.

எங்கோ வெளியில் படுத்திருந்த எங்களுடைய நாய் பப்பி இப்போது என்னுடன் விளையாட வருகிறது. தனது முன்னங் கால்களைத் தூக்கி என்மேல் வைத்துக் கொண்டு செல்லங் கொட்டுகிறது.

சீ சனியன் ! இந்த நேரத்திலைதான் இவருக்கு என்னோடை விளையாட்டு”- நான் சினத்துடன் பப்பியைக் காலால் உதைக்கிறேன். அது வாள் வாள் என்று கத்திக்கொண்டு ஒப்பாரி வைக்கிறது.

இந் ூதேவி ஏன் இப்படிக் கத்துகிறது? நான் மெல்லவாய்த் தானே தட்டினனான். ஏதோ கால் முறிஞ்சுபோன மாதிரியெல்லே சத்தம் போடுது. நான் அம்மாவுக்கு கேட்கக் கூடியதாக கூறுகிறேன்.

சோற்றை வெளியே வீசிவிட்டுக் கையைக் கழுவுகிறேன்.

எனக்கு நித்திரை வரவில்லை. பாயில் படுத்திருந்து ஒருவருக்குந் தெரியாமல் அழுகிறேன். நாளைக்கு அக்கா என்னோடை கதைச்சாலும் நான் அவவோடை கதைக்க மாட்டன். அவவுக்கு இப்ப பெரிய எண்ணம். கலியாணம் முடிச்சபிறகு கண்கடை தெரியேல்லை. அவ என்னோடை கதைக்காட்டில் எனக்கென்ன? எனக்கொண்டும் குறையமாட்டுது.

எனக்கு எப்ப நித்திரை வந்ததோ தெரியாது. காலையில் எழுந்திருக்கிறதுக்கு நேரமாகிவிட்டது.

மணி! மேசையிலை உனக்கு பிஸ்கட் வைச்சிருக்கிறன் எடுத்துத் தின்அக்காதான் சொல்லுகிறா.

நான் கேட்காதவன் போல அந்த இடத்தைவிட்டு நழுவுகிறேன். அவ கொண்டுவந்த பிஸ்கட் எனக்குத் தேவையில்லை.

அடுத்த வீட்டு ராணி விளையாடுவதற்கு வந்திருக்கிறாள். ராணியுடன் அவளுடைய சின்ன தம்பியும் வந்திருக்கிறான். நானும் ராணியுந்தான் விளையாடுவோம். ராணியுடைய தம்பிக்கு விளையாடத் தெரியாது. நாங்கள் வீடுகட்டி விளையாடினால் அதை உடைக்கத்தான் தெரியும். நாங்கள் மண்ணில் சோறு கறி சமைச்சுக்கொடுத்தால் அதைச் சாப்பிடவுந் தெரியாது. சும்மா அழுதுகொண்டு எங்களை விளையாட விடாமல் குழப்பத்தான் தெரியும். விளையாட வருகிறபோது தம்பியைக் கூட்டிக்கொண்டு வர வேண்டாமென்று ராணியிடம் சொன்னால் அவள் கேட்கமாட்டாள். ஒவ்வொரு நாளும் கூட்டிக்கொண்டுதான் வருவாள்.

நானும் ராணியும் அப்பா அம்மா விளையாட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறோம். நான் அப்பா; ராணி தான் அம்மா. அவள் மூன்று கற்களை எடுத்து அடுப்பு மாதிரி வைக்கிறாள். அந்தக் கற்களின்மேல் ஒரு சிரட்டையை வைத்து அதற்குள் தண்ணீர் ஊற்றுகிறாள். அடுப்பில் பானையை வைத்துத் தண்ணீர் ஊற்றியாகி விட்டது. உலையிலே போடுவதற்கு நான் தான் அரிசி கொணர்ந்து கொடுக்க வேண்டும்.

நான் தெருப்பக்கம் போய்க் குறுணிக் கற்களைப்பொறுக்கி கொண்டு வருகிறேன்; அதுதான் அரிசி!

நான் அரிசியைக் கொண்டுவரும்போது அத்தானும் அக்காவும் முன் விறாந்தையில் கதைச்சுக்கொண்டு இருக்கினம். ராணியின் தம்பி ஒரு பிஸ்கட்டை வைத்துக் கடித்துக்கொண்டிருக்கிறான். அக்காதான் கொடுத்திருக்க வேண்டும். நான் ராணியைப் பார்க்கிறேன். அவளும் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள் அக்காவும் அத்தானும் எங்களு டைய விளையாட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கினம். நான் அவர்களைப் பார்க்காதவன் போல வேறு பக்கம் திரும்பிக் கொண்டு வருகிறேன்.

டேய் மணி, இங்கை வா”- அக்கா பிஸ்கட்டைக் கையில் வைத்துக்கொண்டு என்னை கூப்பிடுகிறா.

நான் பேசாமல் இருக்கிறேன் .

என்னடா உனக்குக் காது கேக்கலையோ? பிஸ்கட் தரக் கூப்பிட்டால் கேட்காதவன் மாதிரிப்போறாய்.

எனக்கு உம்முடைய பிஸ்கட் தேவையில்லை.

ஏனட உனக்கெண்டுதானே வாங்கியந்தனாங்கள்

ான் உம்மோடை கோவம். நீர் என்னோடை கதைக்கத் தேவையில்லைநான் முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு சொல்லுகிறேன். அக்காவை நல்லாய்க் கெஞ்ச வைக்க வேணும். அதற்குப் பிறகு தான் பிஸ்கட்டை வாங்க வேணும்.

அப்போது எங்களுடைய நாய் பப்பி அங்கே வருகிறது. நான் பப்பியை உற்றுப்பார்க்கிறேன். அக்கா தான் இதற்கு பப்பி என்று பெயர் வைச்சவ. அவவுக்கு பெயர் வைக்க கூடத் தெரியாது. பப்பன்என்றல்லோ பெயர் வைச்சிருக்க வேணும்

பப்பி திடீரெனப் பாய்ந்து ராணியின் தம்பி வைச்சிருந்த பிஸ்கட்டை கௌவிக்கொண்டு ஓட்டம் எடுக்கிறது.

எனக்கு சிரிப்புத்தான் வந்தது. கையை தட்டிக் கொண்டு துள்ளிச் சிரிக்கிறேன்.

தம்பி வீரென்று அழத் தொடங்கிவிட்டான். அவருக்கு நல்லாய் வேணும். எங்கடை அக்கா கொண்டு வந்த பிஸ்கட்டை நான் தின்னாமல் இருக்க, அவர் மட்டும் தின்னலாமோ?

தம்பி அழுவதைப் பார்க்க ராணிக்கும் அழுகை வந்துவிட்டது. அவள் வைச்சிருந்த பிஸ்கட்டைத் தம்பிக்குக் கொடுக்கிறாள். அப்போது தான் அவனுடைய அழுகை அடங்கியது. ராணி தன்னுடைய சட்டையால் தம்பியின் கண்ணீரைத் துடைத்துவிட்டாள். ராணி அப்படிச் செய்வதை பார்க்க எனக்குக் கோபம் வருகிறது.

ராணி உன்னோடை நான் விளையாடமாட்டன். உனக்கு விளையாடத் தெரியாது. நான் அப்பா, நீ அம்மா . அப்படி யெண்டால் நான் புருஷன்; நீ பெண்சாதி. கலியாணம் முடிச்ச பிறகு பெண்சாதி புருஷனிட்டைத்தான் அன்பாயிருப்பா; தம்பியிடம் அன்பாயிருக்க மாட்டா. தம்பி இருக்கிறதையே அவ மறந்துபோயிடுவாநான் அப்படிச் சொல்லுகிறபோது எனக்கு அழுகை வந்துவிடும் போலிருக்கிறது.

வெடுக்கென்று தம்பியின் கையிலிருந்த பிஸ்கட்டைப் பறித்துப் பப்பியிடம் வீசி எறிகிறேன்.

டேய் மணி இங்கை வாட-அக்கா என்னை அதட்டிக் கூப்பிடுகிறா. நான் அக்காவைப் பார்க்கிறேன். ஏன் அக்காவின் கண்கள் கலங்கியிருக்கின்றன?

அக்கா வந்து என்னுடைய கையை பிடிச்சு இழுத்துக் கொண்டு போய் மீண்டும் அத்தானின் பக்கத்தில் உட்காருகிறா. நான் வேறெங்கோ பார்த்தபடி அக்காவின் அருகில் நிற்கிறேன்.

ஏனடா உனக்கு என்னோடை கோவம்?”

என்னால் பேசமுடியவில்லை. அழுகை அழுகையாக வருகிறது. கண்களில் நீர் முட்டிக் கன்னத்தில் வழிகிறது.

அக்கா என்னைத் தன்னுடைய மார்போடு அணைக்கிறா. நான் அக்காவுடைய நெஞ்சிலே முகத்தைப் புதைச்சுக்கொண்டு விம்மி விம்மி அழுகிறேன்.

சீ வெட்கமில்லையேடா உனக்கு? ஏன் இப்படி அழுகிறாய்?” அக்கா எனது தலைமயிர்களை ஆதரவோடு கோதிவிட்டுக்கொண்டு என்னிடம் கேட்கிறா. அதன் பின்பு அக்கா எனக்கு நிறைய பிஸ்கட்டும் இனிப்பும் தருகிறா; நான் சாப்பிடுகிறேன்

அத்தான் நாலைஞ்சு நாள் கழிச்சுக் கொழும்புக்குப் போகிறார். அக்கா போகவில்லை. அக்காவுக்குக் கொஞ்ச நாளில் குழந்தை பிறக்கப்போகிறதாம்; குழந்தை பிறந்த பிறகுதான் அக்கா கொழும்புக்குப் போவாவாம். அதை கேட்க எனக்கு நல்ல சந்தோஷமாக இருக்கு. அக்கா கொஞ்ச நாளைக்கு வீட்டிலை இருப்பா என்பதை நினைக்க எனக்கு மிகவும் சந்தோஷம்.

ராணி ஒவ்வொரு நாளும் எங்களுடைய வீட்டுக்கு வருவாள். எங்களுக்கு அக்கா புதிசு புதிசாக விளையாட்டுக்கள் சொல்லித் தருவா. அக்காவுக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தையோடும் நாங்கள் விளையாடலாம்.

கொஞ்ச நாளில் அக்காவுக்கு ஒரு தம்பிப் பாப்பா பிறந்தது. அக்கா கட்டிலில் படுத்திருந்தா. தம்பிப் பாப்பாவைத் தொட்டிலிலே கிடத்தியிருந்தார்கள் அந்த பாப்பாவைத் தொட்டுப் பார்க்க எனக்கு ஆசையாக இருந்தது. தூக்கி விளையாட வேணும் போல இருந்தது. நான் சின்னப் பொடியன், குழந்தையைத் தூக்கக் கூடாதாம். பெரிசா வளர்ந்த பிறகுதான் தூக்கலாமாம்; அக்கா தான் சொன்னா. நான் பாப்பாவைத் தொட்டுப் பார்க்கிறேன். குட்டிக் குட்டி விரல்கள் எனக்கு ஆசையாக இருக்கு.

பாப்பா பிறந்தவுடன் அத்தானுக்கு தந்தி கொடுத்தார்கள். ஆனால் அவர் உடனே வரவில்லை. அவருக்கு வேலை செய்யிற இடத்திலை லீவு எடுக்க முடியவில்லையாம். அத்தான் உடனே வராதது எனக்குச் சந்தோஷமாக இருந்தது. அத்தான் வந்தால், அக்கா அத்தானைத்தான் கவனிப்பா; அவரோடைதான் அன்பாயிருப்பா. அத்தானோடைதான் அடிக்கடி பேசுவா. என்னோட பேசுவதற்கு அக்காவுக்கு நேரம் இருக்காது.

திடீரென்று ஒருநாள் விடியும்போது அத்தான் காரில் வந்து இறங்கினார். நான்தான் முதலில் அத்தான் வருவதை கண்டேன். அக்காவிடம் ஓடிப்போய் அத்தான் வந்திட்டார்என்று சொன்னேன். உடனே அக்கா எழுந்து முன்வாசலுக்கு ஒடிவருவா என்றுதான் நினைத்தேன். அக்கா எழுந்திருக்கக் கூட இல்லை. தம்பிப் பாப்பாவோடு கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தா. அத்தான் வரும்போது அக்கா எழுந்து அத்தானை வரவேற்க வாசலுக்குக்கூட வராதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அத்தான், அக்கா இருந்த அறைக்கு வந்தார். அக்கா தம்பி பாப்பாவை அத்தானுக்குக் காட்டிறா. அத்தானையே உரிச்சு வைச்சதுபோலத் தம்பிப் பாப்பா இருக்கிறானாம்; அக்காதான் அத்தானிடம் சொன்னா. அத்தானுக்குப் பெரிய புழுகம். அத்தான் தம்பிப்பாப்பாவை தூக்கி முத்தங் கொடுக்கிறார்.

ஐயையோ, குழந்தைக்கு நோகப்போகிறது என்று சொல்லி அக்கா உடனே தம்பிப் பாப்பாவை வாங்கிக் கொள்ளுகிறா.

அத்தான் இரவு றெயிலில் வந்தவர். அதனால் அவருக்கு களைப்புப் போலத் தெரியுது. அக்காவிடம் கோப்பி போட்டுத் தரும்படி சொல்லுகிறார்.

குழந்தைக்குப் பசிக்கும், பால் கொடுத்துவிட்டு உங்களுக்குக் கோப்பி தருகிறேன்என்று சொல்லிக்கொண்டு அக்கா தம்பிப் பாப் பாவுக்குப் பால் கொடுக்கிறா.

முந்தியென்றால் அத்தான் படுக்கையில் இருக்கும்போதே அக்கா கோப்பி போட்டுக் கொண்டுவந்து அத்தானை எழுப்புவா, அத்தான் கோப்பி குடிச்சபிறகுதான் கட்டிலை விட்டு இறங்குவார். அத்தான் கேட்காமலே அக்கா அவருக்கு வேண்டியதையெல்லாம் செய்வா. இண்டைக்கு அத்தான் கோப்பி போட்டுத் தரும்படி கேட்டும் அவருக்குக் கோப்பி கிடைக்கவில்லை.

அக்கா பால் கொடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, அம்மா கோப்பி போட்டுக்கொண்டு வந்து அத்தானுக்கு கொடுக்கிறா. அவருக்கு சாப்பாடும் அம்மாதான் கொடுக்கிறா.

அக்கா தம்பி பாப்பாவைத்தான் நன்றாகக் கவனிக்கிறா. தம்பிப் பாப்பாவைக் குளிக்க வார்க்கிறா, பவுடர் போடுகிறா, பால் கொடுக்கிறா, தம்பிப் பாப்பாவோடுதான் அக்கா இரவில் படுக்கிறா.

இதையெல்லாம் பார்க்க எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. அத்தானை நினைக்கும்போது பாவமாகவும் இருக்கிறது. அத்தான் நிறைய பிஸ்கட், சொக்கிலெட் எல்லாம் வாங்கி வந்தார். எனக்கு விளையாடுகிறதுக்கு ஒரு பொம்மையும் வாங்கி வந்தார். அது நல்ல வடிவான ரப்பர்ப் பொம்மை.

ராணி வந்ததும் நானும் அவளும் அந்தப் பொம்மையை வைச்சு விளையாடுகிறோம். இண்டைக்கும் எங்களுக்கு அப்பா அம்மாவிளையாட்டுத்தான். நான் அப்பா, ராணி அம்மா, பொம்மைதான் எங்களுடைய தம்பிப் பாப்பா.

ராணி அந்தப் பொம்மையை மடியில் வைச்சுக் கொண்டு ஆராரோஎன்று தாலாட்டுகிறாள். குழந்தையைத் தூங்க வைக்கிறாளாம்.

குழந்தைக்குப் பசிக்கும் பால் கொடுநான் ராணியிடம் சொல்லுகிறேன்.

அக்கா குழந்தைக்குப் பால் கொடுக்கிறதைப் போலவே ராணியும் அந்தப் பொம்மையை இரண்டுகைகளாலும் தூக்கித் தன்னுடைய நெஞ்சோடு அணைச்சுப் பால் கொடுக்கிறாள்.

முன் விறாந்தையில் இருந்த அக்காவும் அத்தானும் அதைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்

ராணிக்கு வெட்கம் வந்துவிட்டது.

சீ ராணி உதென்ன விளையாட்டு? என்று அக்கா அதட்டுகிறா.

இவ்வளவு நேரமும் தூரத்திலிருந்து எங்களுடைய விளையாட்டைக் கவனித்துக்கொண்டிருந்த பப்பி, மெதுவாக வந்து தீடீரென்று எனக்குப் பக்கத்திலே கிடந்த பிஸ்கட் பெட்டியைக் கௌவிக் கொண்டு ஓட்டம் எடுக்கிறது.

நான் அதைப் பறித்து எடுப்பதற்காகப் பப்பியைத் துரத்திக் கொண்டு பாய்ந்து ஓடுகிறேன். சனியன் பிடிச்ச கல்லொன்று என்னுடைய காலை இடறிவிட்டது. நான் நெஞ்சு அடிபட விழுந்துவிட்டேன். என்னால் எழும்ப முடியவில்லை. முழங்கால் நன்றாக நிலத்திலே உரஞ்சுப்பட்டு விட்டது. கொஞ்சம் ரத்தம் வருகிறது. துப்பலைத் தொட்டு காயத்தில் அப்புகிறேன்; அப்பவும் எரிச்சல் குறையவில்லை. எனக்கு அழுகை வந்துவிட்டது.

ராணி பொம்மையை வீசி எறிந்துவிட்டு என்னிடம் ஓடி வருகிறாள். என்னுடைய கையைப் பிடித்து மெதுவாகத் தூக்குகிறாள்.

நான் ராணியின் கையைக் கோபத்தோடு தட்டி விடுகிறேன். எனக்கு ராணியின் மேல் கோபங்கோபமாக வருகிறது. ராணிக்கு அப்பா அம்மா விளையாட்டு விளையாடவே தெரியாது. தம்பிப் பாப்பாவை வீசி எறிஞ்சுவிட்டு அவள் வருவதைப் பார்க்க எனக்கு எரிச்சலாக இருக்கிறது.

நான் விழுந்துவிட்டதைப் பார்த்ததும் அக்காவும் அத்தானும் அருகே ஓடிவருகிறார்கள்.

தம்பிப் பாப்பா கிடைச்ச பிறக ீ அதிலைதான் அன்பாயிருக்க வேணும். தம்பிப் பாப்பாவைத்தான் நீ முதலில் கவனிக்கவேணும். அதைக் கவனிச்ச பிறகுதான் என்னைக் கவனிக்கவேணும். பெம்பிளையளென்றால் அப்பிடித்தான்; பாப்பா கிடைச்ச பிறகு புருஷனை விடப் பாப்பாவிடந்தான் கூட அன்பாயிருப்பினம். நான் ராணியிடம் சொல்லுகிறேன்.

நான் சொல்லிறது ஒண்டும் அவளுக்கு விளங்கவில்லை; முழிக்கிறாள்.

கள்ளப்பயல என்னடா சொன்னனி? உனக்கு இதிலையிருக்கிற மூளை படிப்பிலை இல்லைஎன்று சொல்லிக் கொண்டு அக்கா என்னை மெதுவாகத் தூக்குகிறா. அக்காவும் அத்தானும் சிரிக்கிறார்கள்.

நான் ராணியை இழுத்துக்கொண்டு திரும்பவும் அப்பா அம்மா விளையாட்டு விளையாடப் போகிறேன்.

பப்பி தூரத்திலிருந்து எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் விளையாடுகிறோம்.

பொம்மை தம்பிப் பாப்பாவாகிறது

ராணி அம்மாவாகிறாள்

நான் அப்பாவாகிறேன்.

-கதம்பம் 1971.

(1972ஆம் ஆண்டு இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத் தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற கதை.)
மேலும்
படிக்க :http://www.gnanam.info/publications/ss/

|
This entry was posted on 1:17 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 கருத்துகள்:

On 17 டிசம்பர், 2008 அன்று 11:59 PM , ஹேமா சொன்னது…

இரவீ,நீங்க எங்க ஊர்க்காரரா?எங்கள் இயல்பான வாழ்க்கை வழமைக் கதை.நானும் ரசித்தேன்."அவவுக்குப் பெரிய எண்ணம்,பெரிய நடப்பு அவவுக்கு"மனதோடு சிரித்துக் கொண்டேன்.எங்கள் இயல்புத் தமிழ் வார்த்தை.அருமையாகத் தெரிவு செய்து பதிவிட்டு இருக்கிறீர்கள்.நன்றி.

 
On 18 டிசம்பர், 2008 அன்று 2:42 AM , - இரவீ - சொன்னது…

//ஹேமா said...

//நீங்க எங்க ஊர்க்காரரா?எங்கள் இயல்பான வாழ்க்கை வழமைக் கதை//

ஹேமா இது "http://www.gnanam.info/publications/ss/" என்ற இணைய தளத்தின் வாயிலாக பெறப்பட்ட கதை. என் பங்கு ஒன்றும் இல்லை. (தேடுதலின் வாயிலாய் கிடைக்க பெற்ற சிறுகதை.)

நீங்க கோண்டாவில் - நான் கும்பகோணம்
ஆனா இருவருமே,
தமிழர்கள், அயல்நாட்டில் வசிப்பவர்கள்,
தாய் - தாய்நாடு பிடித்தவர்கள் - என்று நினைக்கின்றேன்.

அதனால - நான் உங்க ஊர்காரர்.

//"அவவுக்குப் பெரிய எண்ணம்,பெரிய நடப்பு அவவுக்கு"//
தற்போது நானும் மனதோடு சிரித்துக் கொண்டேன் :))

நன்றி - மீண்டும் வருக.

 
On 19 டிசம்பர், 2008 அன்று 4:08 AM , ஹேமா, சொன்னது…

இரவீ,குழந்தைநிலாவோடு ஒரு உலாவா இன்று.உங்கள் பின்னூட்டங்கள் என்னை ரசிக்க வைத்தன.அதோடு என் பழைய கவிதைகளை உங்கள் தயவில் இன்று மீண்டும் வாசித்தேன் நன்றி.

"கண்டுகொண்டேன்" பதிவுக்குள் நானும் கண்ட ரசித்த செய்திகள் பல.அதோடு நீங்கள் தந்த வலைத்தளதிற்கும் போய் வந்தேன்.பிரயோசனமாக இருந்தது.நன்றி மீண்டும்.

//நீங்க கோண்டாவில் - நான் கும்பகோணம்.//
ஓ...அப்படியா!என்ன நடுவில கொஞ்சம் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கு.அப்படித்தானே?

//ஆனா இருவருமே தமிழர்கள்.
தாய் - தாய்நாடு பிடித்தவர்கள் - என்று நினைக்கின்றேன்.//
அதென்றால் உண்மை.

அவருக்கும் பெரிய எண்ணம்.

 
On 19 டிசம்பர், 2008 அன்று 7:02 PM , - இரவீ - சொன்னது…

//ஓ...அப்படியா!என்ன நடுவில கொஞ்சம் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கு.அப்படித்தானே?//
நானும் அப்படிதான் நினைத்து கொண்டிருந்தேன் - தற்போது நான் பணிபுரியும் இடத்தில் விட்டுப்போன என் உறவை பார்க்கும்வரை...
பிறகு அறிந்தேன் - எங்களிடம் மறைக்கப்படும் உண்மை, திரிக்கப்படும் கதை எததனை எததனை ... வீடும் - உறவும் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு எவ்வளவு சந்தோசம் - கண்கூடாக பார்க்கிறேன். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் - தர்மம் மறுபடியும் வெல்லும்.

அப்ப "(சுவிஸ்)" அவருடையதா ?

 
On 20 டிசம்பர், 2008 அன்று 3:52 AM , ஹேமா சொன்னது…

இரவீ,இப்போதும் எங்கள் உறவுப் பாலத்துக்கிடையில் கொஞ்சம் தண்ணீர்தான்.அரசியல் செய்பவர்கள்தான் அதைப் பெரிதாக்கி கப்பல் விடுகிறார்கள்.மனதளவில் எங்கள் இன உணர்வுக்கு நடுவில் யாருமில்லை.நீங்கள் ஏதோ சொல்லியிருக்கிறீர்கள்.விளங்கவில்லை என்னவென்று.

நீங்கள் சொல்வதுபோலத்தான் கிட்டத்தட்ட 70-80 வருடங்களாக தர்மம்,சூது என்று அறவழியில் போராடிப் பார்த்தார்கள்.என்ன நடந்தது?

"அவருக்கும் பெரிய எண்ணம்"
உங்களைத்தான் சொன்னேன்.எங்கள் இயல்வாழ்வில் கோபமாக,செல்லமாக,
சந்தோஷமாகப் பாவிக்கும் ஒரு வாக்கியம்.நீங்களும் சொல்வீர்களா?

 
On 20 டிசம்பர், 2008 அன்று 1:58 PM , - இரவீ - சொன்னது…

தெளிவில்லாத வரிகளுக்காக வருந்துகிறேன்,
நான் கூறியது அந்த கப்பலை பற்றிதான்,

அதில் சில கப்பல் இங்கே,
நம் மக்களே போராட்டம் பிடிக்காமல் இருக்கின்றனர்,
நம் மக்கள் பலவந்தமாக இயக்கத்தில் இணைக்கபடுகின்றனர்,
இவ்வாறாக பலகருத்துக்களை பரப்பிவிட்டுள்ளனர்

இவை அனைத்தும் திரிக்கப்பட்ட செய்திகள் என்றும்,
தற்போது கிடைத்துள்ள ஒரு சில அங்கீகாரங்கள் கூட போராட்டத்தின் விளைவே என்று விளக்கம் கிடைத்தது.

------------
'அவர்' என்பது - இங்கு பெண்கள் தனது உடையவர் 'பதியை' குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தை என்பதால் - இந்த குழப்பம்.
அதன் காரணமாகவே - //அப்ப "(சுவிஸ்)" அவருடையதா ? // என்று கேட்டிருந்தேன்,
நாட்டின் பெயரையோ - கணவனின் பெயரையோ இவ்வாறு இணைப்பது வழக்கம்
நீங்கள் வெளிநாட்டில் இல்லை என்பதால் "(சுவிஸ்)" அவரின் குறிப்போ என்று கருதினேன்...
-------------

தமிழகத்தில் தமிழ் - படாத பாடு பட்டுகொண்டுள்ளது,
ஒரு சில புண்ணியவான்களே உருப்படியாக தமிழ் பேசுகின்றனர்,
மற்ற அனைவரும் என்னை மாதிரி தான்.

 
On 20 டிசம்பர், 2008 அன்று 11:25 PM , Poornima Saravana kumar சொன்னது…

வாவ்! கதை அருமை.. ஒரே மூச்சில் படித்து விட்டுத்தான் நிமிர்ந்தேன். அவ்ளோ சுவாரசியமா இருந்துச்சு. எங்களுக்காக தேடிப் பிடிச்சு அருமையான கதை அளித்தமைக்கு நன்றி. இதை விட முக்கியமான ஒன்று எனக்கு அவக பேசும் தமிழ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

 
On 21 டிசம்பர், 2008 அன்று 12:27 AM , - இரவீ - சொன்னது…

வாங்க பூர்ணிமா,
வருகைக்கும் - கருத்துக்கும் மிக்க நன்றி,
லலிதாவின் பாட்டுக்கு பாட்டு - அப்துல் ஹமீது அவர்களின் இனிமை தமிழுக்காக பார்த்தவன் என்றமுறையில் - உங்கள் ரசனையுடன் ஒற்று போகிறேன்.

"http://www.gnanam.info/publications/ss/" என்ற இணைய தளத்தில் - மற்றும் பல சுவையான கதைகள் இருக்கின்றன (உங்கள் ரசி ருசி போல), நேரம் கிடக்கும் போது படித்து - நான் உங்கள் 'குறுஞ்செய்தி கலாட்டா' கு சிரித்து மகிழ்ந்தது போல் மகிழ வாழ்த்துக்கள்.

 
On 21 டிசம்பர், 2008 அன்று 10:11 AM , Poornima Saravana kumar சொன்னது…

ரொம்ப நன்றிங்க இரவீ :)

 
On 23 டிசம்பர், 2008 அன்று 2:05 AM , Mathu சொன்னது…

Wow..நல்லா இருக்கு கதை. ஊர் எழுத்து நடையில்..

 
On 23 டிசம்பர், 2008 அன்று 10:00 PM , - இரவீ - சொன்னது…

Mathu,
முதல் வருகை - மிக்க மகிழ்ச்சி மது,

எதற்கு 'மிக்க' மகிழ்ச்சி என உங்கள் இடுகையால் வந்த என் புதிய "வா நாயே - போ நாயே" பதிவை பார்க்கவும் .